Search This Blog

Saturday 24 September 2011

கடமையான மற்றும் உபரியான வணக்கங்களை நிறைவேற்றுவார்



    உண்மை முஸ்லிம், இஸ்லாமின் அனைத்து கடமைகளையும் அலட்சியம், மறதி மற்றும் குறைபாடுகள் எதுவுமின்றி பூரணமாக அழகிய முறையில் நிறைவேற்றவேண்டும். அவர் ஐந்து நேரத் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் நிறை வேற்றுவார். எனெனில், தொழுகை மார்க்கத்தின் தூணாகும்; அமல்களில் மிக உன்னதமானதாகும். அதை நிறைவேற்றுபவர் மார்க்கத்தை நிலை நாட்டுகிறார். அதை வீணடிப்பவர் மார்க்கத்தைத் தகர்த்தவராவார்.
     இப்னு மஸ்வூது(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி(ஸல்) அவர்களிடம், “அமல்களில் சிறந்தது எது?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “தொழுகை, அது உரிய நேரத்தில் (நிறைவேற்றுவது)” என்று கூறினார்கள். “”பிறகு என்ன?” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “பெற்றோருக்கு உபகாரம் செய்தல்” என்று கூறினார்கள். “பிறகு என்ன?” என்றேன். “அல்லாஹ்வின் பாதையில் போரிடுதல்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
     தொழுகை சிறப்படையக் காரணம் அது அடியானுக்கும் அவனது இரட்சகனுக்குமிடையே தொடர்பை எற்படுத்துகிறது. தொழுபவர் உலகின் அனைத்து ஈடுபாடுகளிலிருந்தும் தன்னை துண்டித்துக் கொள்கிறார். தனக்குரிய அனைத்தையும் இறைவனிடம் சமர்ப்பிக்கிறார். தொழுகையின் மூலம் நேர்வழியையும் உதவியையும் பெற்றுக் கொள்கிறார். நேர்வழியின் மீது உறுதியாக நிலைத்திருப்பதை அல்லாஹ்விடம் வேண்டுகிறார்.
    தொழுகை, சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்த அமலாக இருப்பதில் வியப்பொன்றுமில்லை. அது முஸ்லிம் தனது மறுமை பயணத்திற்காக இறையச்சம் என்ற கட்டுச் சாதத்தைத் தயார் செய்வதற்குரிய செழிப்பு மிக்க வழியாகும். அது தூய்மையான மதுரமான நீரூற்றாகும். அந்தத் தூய்மையான நீரால் முஸ்லிம் தனது பாவங்களைக் கழுவிக் கொள்கிறார்.
    அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்: “உங்களில் ஒருவரது வீட்டு வாசலில் ஆறு ஒடிக்கொண்டிருந்து, அதில் ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை அவர் குளிப்பாரானால் அவரது உடலில் எதேனும் அழுக்குகள் இருக்குமா? நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். “எந்த அழுக்கும் (அவர் மீது) இருக்காது” என நபித்தோழர்கள் கூறினர். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அதுதான் ஐந்து நேரத் தொழுகைக்கு உதாரணமாகும். அதைக்கொண்டு அனைத்து பாவங்களையும் அல்லாஹ் அகற்றி விடுகிறான்.” (ஸஹீஹுல் புகாரி)
    நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஐந்து நேரத் தொழுகையை தொழுபவர், உங்களில் ஒருவரின் வீட்டு வாசலில் ஒடும் அழமான ஆற்றில் ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை குளிப்பவரைப் போன்றவராவார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
    இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் ஒரு பெண்ணை முத்தமிட்டுவிட்டார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் அதைக் கூறினார். அப்போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கிவைத்தான்:
    பகலின் இரு முனைகளாகிய காலை, மாலைகளிலும் இரவின் நிலைகளிலும் நீங்கள் (தவறாது) தொழுது வாருங்கள்! நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும். (இறைவனை) நினைவு கூர்வோருக்கு இது ஒரு நல்லுபதேசமாகும். (அல்குர்அன் 11:115)
    “”அம்மனிதர் (இந்த வசனம்) எனக்கு மட்டுமா?” என்றார். நபி (ஸல்) அவர்கள், “எனது உம்மத்தினர் அனைவருக்கும் (பொருந்தும்)” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “பெரும்பாவங்கள் நிகழாதவரை ஐந்து நேரத் தொழுகைகள் அவைகளுக்கு மத்தியில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். அதுபோன்றே ஒரு ஜுமுஅவிலிருந்து மறு ஜுமுஅவரை” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
    உஸ்மான் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்: “”எந்தவொரு முஸ்லிம் அவருக்கு பர்ளான தொழுகை கடமையாகும்போது அழகிய முறையில் உளூச்செய்து உள்ளச்சத்துடன் அதன் ருகூவுகளைப் பேணித் தொழுவாரானால் அது பெரும்பாவங்களைத் தவிர அவர் செய்த அனைத்துப் பாவங்களுக்கும் பரிகாரமாகும். இது எல்லா காலத்திற்கும் உரியதாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
    தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சிறப்புகளை விவரிக்கும் நபிமொழிகளும், சம்பவங்களும், தொழுபவர்கள் அடைந்து கொள்ளும் நன்மைகளும் ஏராளம். அவை அனைத்தையும் குறிப்பிட இங்கே பக்கங்கள் போதாது. முடிந்தளவு இறையில்லம் செல்ல வாய்ப்பு கிடைத்தால் முதல் ஜமாஅத்தை அடைந்துகொள்ள இறையச்சமுடைய முஸ்லிம் பேராவல் கொள்ளவேண்டும்

No comments:

Post a Comment

My Blog List