Search This Blog

Saturday 24 September 2011

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை இலட்சியமாகக் கொள்வார்

    முஸ்லிம், தனது செயல்கள் அனைத்திலும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை தேடவேண்டும். அவரது ஒவ்வொரு அடியும் அவனது திருப்தியை நோக்கியே எடுத்து வைக்கப்பட வேண்டும். மனிதர்களின் திருப்தியை நோக்கமாகக் கொள்ளக்கூடாது. அல்லாஹ்வின் நேர்வழியில் செல்லும்போது சில சமயங்களில் மனிதர்களின் கோபத்திற்கு இலக்காக நேரிட்டாலும் சரியே.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் மனிதர்களின் கோபத்திலும் அல்லாஹ்வின் திருப்தியைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவருக்கு மனிதர்களால் ஏற்படும் ஆபத்திலிருந்து பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன். எவர் அல்லாஹ்வின் கோபத்திலும் மனிதர்களின் திருப்தியைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவரை அல்லாஹ் மனிதர்களின்பால் சாட்டிவிடுகிறான்.” (ஸூனனுத் திர்மிதி)
     இந்நிலையில், முஸ்லிம் தனது செயல்களை அல்லாஹ்வின் திருப்தி எனும் தராசில் நிறுத்துப் பார்க்கிறார். அல்லாஹ்வின் திருப்தியின் தட்டு கனமானால் அதை ஏற்று திருப்தியடைகிறார். தராசின் தட்டு மறுபக்கம் சாய்ந்தால் அதை அலட்சியப்படுத்தி விடுகிறார். இவ்வாறே அவரது நேர்வழியின் அளவுகோல்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
     அவரது பார்வையில் நேரிய, நடுநிலையான பாதை தென்படுகிறது. எனவே அவர் பலவீனமான, பரிகாசத்திற்குரிய முரண்பாடுகளில் வீழ்ந்துவிட மாட்டார். ஒரு விஷயத்தில் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு, மற்றொரு விஷயத்தில் முரண்படுதல்; சில நேரங்களில் ஹலாலாக ஆக்கிக் கொண்டதை மற்றொரு நேரத்தில் ஹராமாக்கிக் கொள்வது போன்ற செயல்கள் முஸ்லிமிடம் எற்படாது. ஏனெனில், அவர் தெளிவான பாதையைத் தேர்ந்தெடுத்து உறுதியான கொள்கையைக் கொண்டுள்ளவராவார். எனவே அவரிடம் இவ்வாறான முரண்பாடுகளுக்கு இடமில்லை.
    சிலர் மஸ்ஜிதுகளில் இறையச்சத்துடன் தொழுவார்கள். ஆனால் அவர்களை கடைவீதியில் வட்டி வாங்குபவர்களாக காணமுடிகிறது. அல்லது குடும்பம், கடைவீதி, கல்விக் கூடங்கள், சங்கங்கள் இவற்றில் எதிலுமே அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்ற மாட்டார்கள். இதற்குக் காரணம் இம்மார்க்கத்தைப் பற்றிய அவர்களின் அறியாமையே.
     அவர்கள் ஒவ்வொரு செயலையும் தங்களது திருப்தியின் தராசைக் கொண்டு அளவிடுகிறார்கள். இதனால்தான் அவர்கள் முஸ்லிம்களிடையே காணப்பட்டாலும் பெயரைத் தவிர இஸ்லாமில் அவர்களுக்கு எந்தப் பங்குமிருப்பதில்லை. இது தற்காலத்தில் முஸ்லிம்களை எதிர்நோக்கியுள்ள மாபெரும் சோதனையாகும்.

No comments:

Post a Comment

My Blog List