பயன்பாடு
ஆசியாவில் பலாப்பழங்கள் பலவாறாக உண்ணப்படுகின்றன. பெரும்பாலும், நன்கு பழுத்த பழத்தின் சுளைகள் அப்படியே உண்ணப்படுகின்றன. சிறு காய்,மற்றும் முற்றிய காய்களின் சுளைகள் கூட கறியாக சமைத்தோ அல்லது மெல்லிய வறுவல்களாகவோ உண்ணப்படுகின்றன.ஆனால், மேலை நாடுகளில் பலாப்பழத்தின் மணம் விரும்பத்தகாததாக கருதப்படுகிறது. எனவே, அவர்கள் பெரும்பாலும் முற்றிய காய் சுளைகளையே உண்கின்றனர். மற்ற பழங்களைப் போலவே பலாப்பழத்திலிருந்தும் சாறு, ஐஸ் கிரீம், பழக்கூழ் மற்றும் பல விதமான உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.
பலாப்பழத்தின் விதைகள் கூட ஆசியாவில் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை வறுத்தும், வேக வைத்தும், சர்க்கரைப்பாகில் ஊற வைத்தும் உண்ணப்படுகின்றன. இவற்றை அரைத்து மாவும் தயாரிக்கப்படுகிறது. பலாப்பூக்கள் கூட சிலரால் சமைத்து உண்ணப்படுகின்றன.

உடல் நல பலன்கள்
பலாச்சுளைகள் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1, பி2 ஆகியவை கொண்டுள்ளன.அதிக அளவில் பலாப்பழம் உண்பது நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது. பழுக்காத பழச்சுளையை அப்படியே உண்பது நல்லதல்ல. அதே போல சமைக்காத கொட்டைகள் ட்ரிப்சின் என்ற புரதச்சிதைவு நொதியை பாதிப்பதால் செரிமாணத்தை பாதிக்ககூடும். பழுத்த பலாச்சுளைகள் மலமிளக்கியாக செயல்படுகின்றன.