Search This Blog

Tuesday 20 September 2011

வாய் விட்டு கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.

Post image for சந்தேகம் சந்தேகம் சந்தேகம்……உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன. என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?
ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.
வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.
கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். “அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?”
அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். “நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை”
வீரன் மகனைக் கேட்கிறான். “பின் யார் அப்பா?”
“தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்”
வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.
மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.
மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். “இதோ என் அப்பா”
திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.
வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.
இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?
எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.
புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.
தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.
எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.
அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!

முஸ்லிம்களே ஒன்று படுவீர்

கணவனின் கடமை


Post image for கணவனின் கடமைகணவன் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவளுடன் அழகிய முறையில் பழகுவது, அவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம் போதிக்கும் நல்லுரைகளை நாம் ஆராய்ந்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன. இஸ்லாம், பெண்ணின் உரிமைகளைப் பற்றி மிக ஆழமாக உபதேசித்துள்ளது. அவளுக்கு உலகின் எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது.
இதோ, அல்லாஹ்வின் தூதர்   ஆண்களை எச்சரிக்கிறார்கள்:
“பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
“பெண், விலா எலும்பைப் போன்றவள். அவளை நீ நிமிர்த்தினால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால், அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
“பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள். ஒரே நிலையில் உனக்கு நிலையாக இருக்கமாட்டாள். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால் அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்! அவளை நீ நேராக்க முயன்றால் ஒடித்து விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளைத் ‘தலாக்’ விடுவதாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
இலக்கிய நயமான இந்த உதாரணத்தில் பெண்ணின் இயற்கைத் தன்மைகளையும் பண்புகளையும் மிகத் துல்லியமாக நபி   அவர்கள் விவரித்துள்ளார்கள். மனைவி என்பவள் கணவர் விரும்புவது போன்று ஒரே நிலையில் சீராக இருக்கமாட்டாள். அவளிடம் சில கோணலான பண்புகளும் இயல்பாகவே அமைந்திருக்கும். இதைக் கணவர் விளங்கிக் கொள்ள வேண்டும். பூரணமானது அல்லது சரியானது என, தாம் நினைக்கும் முறையில் அவளைத் திருத்திவிட முயலக் கூடாது. பெண்மைக்கென்று அமைந்துள்ள இயற்கைப் பண்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவளை, அல்லாஹ் எந்த இயல்புடன் படைத்தானோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மனைவியின் சில குணங்கள் தமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, தாம் விரும்புவது போலவே அவளை மாற்றிட நினைப்பது, ‘விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக் கூடாது அவற்றை நேராக்கியே தீருவேன்’ என்று நினைப்பது போலாகும். அப்படி நினைத்துச் செயல் பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய் நிற்கும். அதுபோன்றே ஒரு கணவர் தம் மனைவியை தாம் விரும்பியவாறு சீராக்க நினைப்பதும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்த்துவிடும்.
நபி  அவர்கள் பெண்ணின் மன நிலைiயும் இயற்கைப் பண்புகளையும் ஆழமாக விளங்கி விவரித்திருக்கிறார்கள். இந்த வழிகாட்டுதலை உள்ளத்தில் ஏற்றுள்ள உண்மை முஸ்லிம், தமது மனைவியின் குறைகளை சகித்துக்கொள்வார். அவளது சிணுங்கல்களைப் பொருட்படுத்த மாட்டார். அதன் மூலம் அவரது இல்லறம் சண்டை, சச்சரவு, வாக்குவாதம், கூச்சல் இல்லாத மகிழ்ச்சி, அமைதி, நிம்மதி நிறைந்த இன்பப் பூங்காவாகத் திகழும்.
சற்றுமுன் கூறப்பட்ட நபிமொழியை ஆய்வு செய்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது நபி  அவர்கள், ‘பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று ஆரம்பித்து, பிறகு அவளது இயல்புகளை விவரிக்கிறார்கள். அதன் பின், மீண்டும் தாம் ஆரம்பித்த முந்தைய வார்த்தையைக் கூறியே முடிக்கிறார்கள். ஆகவே, நபி   அவர்கள் பெண்ணுக்கு எந்தளவு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள் அவளது இயல்பைப் பற்றி எந்தளவு ஆழமாக விளங்கி இருக்கிறார்கள் அவள் மீது எந்தளவு இரக்கம் கொண்டுள்ளார்கள் என்பதைக் கவனியுங்கள்! நபி  அவர்களின் இந்த மேலான வழிகாட்டுதல்களை எல்லா நிலைகளிலும் முன்மாதியாக அமைத்து செயல்படுவதைத் தவிர ஓர் உண்மை முஸ்லிமுக்கு வேறு ஏதேனும் வழியுண்டோ!
பெண்களுக்கு மிக முக்கியத்துவம் அளித்ததால்தான் தமது இறுதி ஹஜ்ஜின் பேருரையிலும் பெண்களைப்பற்றி நபி  அவர்கள் உபதேசிக்க மறந்துவிடவில்லை. முஸ்லிம்களுக்கு எவற்றையெல்லாம் சொல்ல வேண்டுமோ அவை அனைத்தையும் கூறுவதற்கான கடைசி வாய்ப்பாக இறுதி ஹஜ்ஜுப் பேருரையைப் பயன்படுத்தினார்கள். அந்த உரையின் ஆரம்பமே பெண்களைப் பற்றியதாக அமைந்திருப்பது, அதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.
நபி  அவர்கள் கூறினார்கள்: “அறிந்து கொள்ளுங்கள்! பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் உங்களிடத்திலே உதவியாளர்களாகவே இருக்கிறார்கள். அதைத்தவிர வேறெதையும் நீங்கள் உரிமையாக்கிக் கொள்ள முடியாது அவர்கள் பகிரங்கமான மானக்கேடான விஷயங்களில் ஈடுபட்டாலே தவிர! அவ்வாறு அவர்கள் ஈடுபட்டால் படுக்கையிலிருந்து அவர்களை ஒதுக்கி வையுங்கள். அவர்களை காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்கள் மீது எந்த மாற்று வழியையும் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர் மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமை என்பது, உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது விரிப்பை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமை என்பது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.” (ஜாமிவுத் திர்மிதி)
நபியவர்களின் இந்த உபதேசத்தை ஒவ்வொரு உண்மை முஸ்லிமும் நிச்சயமாக செவிமடுப்பார். கணவன், மனைவி இருவரின் உரிமைகள், கடமைகள் குறித்து நபி   அவர்கள் எத்துணை நுட்பமாக வழிகாட்டியுள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்வார். இதில் குறிப்பாக பெண்கள் மீது கருணை, அன்பு காட்டுவது, அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வது பற்றி நபி  வலியுறுத்தியுள்ளார்கள். ஆகையால், முஸ்லிம்களின் வீடுகளில் பெண்கள் மீது அநீதி இழைக்கப்படுவது அல்லது அவர்களுக்கு இடையூறு செய்யப்படுவதற்கான எவ்வித வாய்ப்பும் அறவே இருக்காது.
பெண்ணைப் பேணுவதைப் பற்றி நபி  அவர்கள் கூறிய உபதேசங்கள் ஏராளமானவை. தமது மனைவியிடத்தில் அழகிய முறையில் நடந்து கொள்பவர்தான் இச்சமுதாயத்தின் சிறந்தோர்் ஆக முடியும் என்கிற அளவிற்கு நபி   கூறியுள்ளார்கள்.
நபி  அவர்கள் கூறினார்கள்: “நம்பிக்கையாளர்களில் நம்பிக்கையில் (ஈமானில்) பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே! உங்களில் சிறந்தோர் உங்கள் மனைவியடத்தில் சிறந்தோரே!”(ஜாமிவுத் திர்மிதி)
இந்த நபிமொழி, நம்பிக்கையாளர் மிக நேர்த்தியான குணத்தைக் கொண்டிருக்க வேண்டும் அந்த குணமில்லாமல் பரிப10ரண நம்பிக்கையை அடைய முடியாது நாம் யாரை நம்மில் சிறந்தவராக கருதுகிறோமோ அவர், தம் மனைவிக்கும் சிறந்தவராக விளங்க வேண்டும் நம்மிடத்தில் சிறந்தவராக இருந்து மனைவியிடத்தில் சிறந்தவராக இல்லையென்றால் உண்மையில் அவர் நம்மில் சிறந்தவரல்லர்’ என்று வலியுறுத்துகிறது.
சில பெண்கள் தங்களுடைய கணவர்களைப்பற்றி முறையிடுவதற்காக நபி   அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது நபி   அவர்கள் ஆண்களின் காதுகளுக்கு எட்டும் விதமாக “முஹம்மதின் குடும்பத்தாரிடம் சில பெண்கள் தங்களது கணவன்மாரைப்பற்றி முறையிட வருகிறார்கள். அந்தக் கணவர்கள் உங்களில் சிறந்தவர்கள் அல்லர்” என்று கூறினார்கள். (ஸுனன்் அபூதாவூத்)
நேரிய மார்க்கமான இஸ்லாம், பெண்ணுக்கு நீதி வழங்குவதிலும் அவளைக் கண்ணியப் படுத்துவதிலும் ஏனைய மார்க்கங்களைப் பார்க்கிலும் மிக உயர்ந்தே நிற்கிறது. அவளைக் கணவன் வெறுத்தாலும் அவளுடன் நல்ல முறையிலேயே நடந்து கொள்ள வேண்டும் என உபதேசிக்கிறது. பெண்கள், தங்களது வரலாற்றில் இஸ்லாமைத் தவிர வேறெங்கும் இந்தக் கண்ணியத்தை அடைந்து கொண்டதே கிடையாது.
மேலும், “அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்.” (அன்னிஸா 4:19)
இந்த இறைவசனம் உண்மை முஸ்லிமின் உள்ளுணர்வைத் தொட்டுப் பேசுகிறது. அவரது கோபத்தின் கொதிப்பைத் தணிக்கிறது தம் மனைவி மீதான வெறுப்பின் வேகத்தைக் குறைக்கிறது. ஆகவே, இதன் மூலம் மண வளையம் துண்டிக்கப்படுவதிலிருந்து இஸ்லாம் அதைப் பாதுகாக்கிறது. இங்குமங்கும் அலைபாயும் மடத்தனமான எண்ணங்களாலும், மாறிக் கொண்டே இருக்கும் சுபாவத்தினாலும் தூய்மையானத் திருமண உறவில் பங்கம் ஏற்படுவதை விட்டும் கட்டிக்காக்கிறது. தம் மனைவியின் மீது வெறுப்பு ஏற்பட்டு விட்டதால் அவளை விவாகரத்துச் செய்யப் போவதாக கூறிய மனிதருக்கு உமர் (ரழி) அவர்கள் “உனக்கென்ன கேடு! இல்லறம் அன்பின் மீதுதானே அமைக்கப்படுகிறது. அதில், பராமரிப்பும் புறக்கணிப்பும் எப்படி ஒன்று சேர முடியும்?” என்று அறிவுரை கூறினார்கள்.
இஸ்லாமில் திருமண ஒப்பந்தம் என்பது அற்பமான உணர்வுகளின் வெளிப்பாடோ அல்லது இயற்கை ஆசையைத் தணித்து விட்டுப் போவதற்கான வழியோ அல்ல. மாறாக, இதற்கெல்லாம் மேலாகத் தூய்மையானதும் மிகக் கண்ணியமானதுமாகும். உண்மை முஸ்லிமிடம் மனித நேயமும், அறிவும், நற்குணமும், சகிப்புத் தன்மையும், விசாலமான இதயமும் அமைந்திருக்கும். அந்தப் பண்புகள் தமது மனைவியிடம் காணப்படும் வெறுக்கத்தகுந்த குணங்களைச் சகித்துக் கொள்ளும் பக்குவத்தை அவருக்கு அளிக்கும். உண்மை முஸ்லிம் தமது இறைவனின் கட்டளையைப் பின்பற்றுவார். மனைவியின் மீது வெறுப்புள்ளவராக இருந்தாலும் நல்லுறவையே கடைப்பிடிப்பார். தமது இறைவனின் கூற்றுக்கிணங்க தம்மை அமைத்துக் கொள்வார். ஏனென்றால், மனிதன் சில விஷயங்களை வெறுத்து அதிலிருந்து விலகியிருக்க விரும்புகிறான். ஆனால், உண்மையில் அவை நன்மைகளால் சூழப்பட்டதாகவும், நல்லதை உள்ளடக் கியதாகவும் அமைந்திருக்கும்.
எனவே உண்மை முஸ்லிம், எப்படி நேசிக்க வேண்டும், எப்படி வெறுக்க வேண்டும் என்பதையெல்லாம் அறிந்திருப்பார். நேசிப்பவர் மீது குருட்டுத்தனமான நேசத்தைக் கொண்டிருக்கவும் மாட்டார். அதே சமயம், வெறுப்பவர் மீது கல்நெஞ்சம் கொண்ட, பிடிவாதமான, அடிப்படையற்ற கோபத்தையும் வெளிப்படுத்த மாட்டார். நேசிப்பிலும் வெறுப்பிலும் நீதமான நடுநிலையைக் கொண்டிருப்பார்.
“முஸ்லிமான பெண்ணை அவளது கணவர் எவ்வளவுதான் வெறுத்தாலும் அவளிடம் விரும்பத்தகுந்த பல நற்குணங்கள் இருந்தே தீரும். எனவே, அந்தக் கணவர் தமது மனைவியிடம் தமக்கு திருப்தி அளிக்கும் நற்குணங்கள் இருப்பதை மறந்துவிடக் கூடாது. அவளிடம் உள்ள வெறுக்கத்தக்க குணங்களைச் சுட்டிக் காட்டித் திருத்தவும் தவறக்கூடாது” என மகத்தான இறைத்தூதர்   அவர்கள் தெளிவு படுத்தினார்கள்.
நபி  அவர்கள் கூறினார்கள்: “எந்த ஒரு முஃமினும் (நம்பிக்கையாளரும்) முஃமினான பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை அவர் வெறுத்தால் மற்றொரு குணத்தைப் பொருந்திக் கொள்வார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
”இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து
ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தைவெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி
கொள்ளட்டும்” என நபி  அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீ)  நூல்: முஸ்லிம் 2915
உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே
தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்.அறிவிப்பாளர்: முஆவியா (ரலி) நூல்: அஹ்மத் 19160
”அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர்.
உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவுஉட்பட” என்று அல்லாஹ்வின் தூதர்  அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி)  நூல்: புகாரி 56
ஒரு மனிதர் நபியவர்களிடம் ”மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?” என்று கேட்டார்
அதற்கு நபி அவர்கள்,’நீ உண்ணும் போதுஅவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு
அணிவிப்பதும்  இருப்பதும் வீட்டில் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162
”இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம்
கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம்நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!”
என்று நபி  அவரகள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: திர்மதி 1082
 

மனிதனின் மறுபக்கம்

Post image for மனிதனின் மறுபக்கம்

. நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்; அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். (அல்குர்ஆன் 50:16)
2. நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனுமாயிருக்கிறான். (அல்குர்ஆன் 14:34, 100:6)
3. மனிதன் மகா நன்றி மறந்தவானகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 17:67;22:66)
4. நாம் நம்மிடமிருந்து நற்கிருபையை மனிதன் சுவைக்கும்படிச் செய்து பின்பு அதனை அவனை விட்டும் நீங்கி விட்டால், நிச்சயமாக அவன் நிராசைப்பட்டு பெரும் நன்றி கெட்டவனாகிறான். (அல்குர்ஆன் 11:19, 42:48)
5. மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் படுத்துக்கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடம் பிரார்த்திக்கிறான்; ஆனால் நாம் அதனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போலவே (அலட்சியமாக நன்றி மறந்து) சென்று விடுகிறான். (அல்குர்ஆன் 10:12, 39:8)
6. அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் (மனிதன்) இருக்கிறான். (அல்குர்ஆன் 80: 17)
7. நிச்சயமாக மனிதன் பகிரங்கமான பெரும் நிராகரிப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 43:15)
8. நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 33:72)
9. நான் இறந்தால் மீண்டும் உயிருள்ளவனாக எழுப்பப்படுவேனா? என மனிதன் கேட்கிறான். (அல்குர்ஆன் 19:66)
10. நாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங்கினால் அவன் (நன்றி செலுத்தாமல்)புறக்கணித்து(த் தோளை உயர்த்திப்) பெருமையடிக்கிறான்; அவனை (ஏதேனுமொரு) தீங்கு தீண்டுமானால் அவன் நிராசைக் கொண்டவனாகிறான். (அல்குர்ஆன் 17:83)
11. மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான்; பிறகு நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால் , “” இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம் என் அறிவின் மகிமையால்தான்” என (பெருமையுடன்) கூறுகிறான். (அல்குர்ஆன் 39:49)
12. மனிதன் (நம்மிடம் பிரார்த்தித்து) நல்லதைக் கேட்பதற்கு சோர்வடைவதில்லை; ஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசையுள்ளவனாகி விடுகிறான்.
(அல்குர்ஆன் 41:49)
13. மனிதனுக்கு நாம் அருள் புரிந்தால் அவன் (நன்றியுணர்வின்றி) நம்மைப் புறக்கணித்து விலகிச் செல்கிறான்-ஆனால் அவனை ஒரு கெடுதி தீண்டினால் நீண்ட பிரார்த்தனைச் செய்கிறான்.
(அல்குர்ஆன் 41:51)
14. இறைவன் மனிதனை கண்ணியப்படுத்தி பாக்கியமளித்து அவனைச் சோதிக்கும்போது அவன்: “”என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தியுள்ளான் ” என்று கூறுகிறான். எனினும், அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை சோதித்தாலோ அவன், “”என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்”எனப் பிதற்றுகிறான். (அல்குர்ஆன் 89:15,16).

தாய் தந்தையரின் முக்கியத்துவம்

Post image for தாய் தந்தையரின் முக்கியத்துவம்“(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். (17 :23)
தாய் தந்தையரின் முக்கியத்துவத்தைத் தெளிவாக விளக்கும் மிக ஆழமான வசனம். ஆனால் இன்று மனிதர்களில் பெரும்பாலோரும் ஏன்! ஓர் இறைவனை வணங்கும் நிலையில் முதன்மை தரத்தை உடைய மக்களில் பெரும்பான்மையினோரும் பெற்றோர்கள் விஷயத்தில் தான் தாழ்ந்து நடந்து கொள்கின்றனர். இவ்விசயம் அவர்களை சுவனத்திற்கு செல்லும் நிலையை தடுக்கும் சக்தி கொண்ட மிக முக்கியமான ஒரு அம்சம் என்று அவர்கள் அறியாததினாலே! அல்லது அறிந்தும் அசட்டையாக  இருப்பதே!
நம்மைப் போலவே அவர்களும் இளவயதுகளைக் கடந்து இன்று காலத்தின் வேகத்தால் முதுமையை அடைந்திருக்கின்றனர். அவர்களுடைய இளம் வயதில் நம்மை, அதாவது அவர்களுடைய பிள்ளைச் செல்வங்களை நன்றாக வளர்த்து நல்ல ஒரு நிலைக்கு ஆளாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளையே கொண்டு வாழ்ந்தனர். அவர்களின் முயற்ச்சிக்கு தக்கவாரோ அல்லது கூடுதல், குறைவாகவோ இறைவன் அவர்களுக்கு அருளியதைக் கொண்டு நம்மை வளர்த்து நமது இன்றைய நிலைக்கு முக்கியமான கருப்பொருளாக இருக்கின்றனர். இதை நாம் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இன்று பெரும்பான்மையோரின் கூற்றுக்களை ஆராய்வோமேயானால் மிகப் பெரும் ஆச்சரியமாக இருக்கும்; அதாவது:-
“எங்களுடைய பெற்றோர்கள் எங்களுக்கு எதையுமே விட்டு வைக்கவில்லை,” அதனால் தான் நாங்கள் இவ்வளவு கஷ்ட்டப்படுகிறோம்”
என்பதே அக்கூற்று இக்கூற்றுக்காரர்கள் ஒரு முக்கியமான விசயத்தை மறந்து விடுகின்றனர். அதாவது இவர்களுடைய பிள்ளைகளும் நாளைக்கு இதே கூற்றைத் தானே மொழிவார்கள்! இதன் பின்னணி என்ன என்பதைக் காண்போம்.
எந்த ஒரு மனிதனாயினும் அவனுடைய முயற்சிகள் அத்தனையும் பிரயோகித்து எப்படியாகிலும் நாம் ஒரு நல்ல நிலையை அதாவது ஒரு வசதியான வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றே முயற்சி செய்கிறான். அப்படி முயற்சி செய்யும்பொழுது இறைவனின் நாட்டப்படி சிலர் நல்வழியில் சம்பாதித்து முன்னேறுகிறார்கள். சிலர் தீயக் காரியங்களில் முயற்சித்து அந்நிலையை அடைகிறார்கள். சிலர் எந்நிலை முயன்றும், முன்னேறாமல் எப்பவும் போல் ஒரே நிலையில் இருக்கிறார்கள்.
இறைவனின் நாட்டப்படியே அனைத்தும் நடக்கிறது என்பதை அறிகின்ற விசுவாசிகளான மனிதர்கள், மேற்சொன்ன மூன்றாவது நிலையை அடைகின்ற பெற்றோர்கள் எந்நிலையிலும் அவ்வாழ்க்கைக்கு அவர்கள் முழுப் பொறுப்பல்ல என்பதை உணர வேண்டும். இதை மேலும் உணர வேண்டுமாயின் ஒவ்வொருவரும் தத்தமது நிகழ்கால வாழ்க்கையையே உதாரணமாகக் கொள்ளலாம். அதாவது நமது முயற்சி எப்படிப்பட்டது? அதற்காக நாம் செய்கின்ற தியாகங்கள் முதலியன. இதிலிருந்து நாம் எந்த அளவு இன்றைய நிலையில் முயற்சிக்கிறோமோ! அதை போலவே அல்லது அதைவிடக் கூடுதலாகவே நம் பெற்றோர்களும் முயற்சித்து இருக்கலாம். ஆனால் இறைவனின் நாட்டப்படி அவர்களுக்கு உண்டானதை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இதை நாம் முற்றிலும் நன்கு ஆராய்ந்து உணர்ந்தவர்களாக பெற்றோர்களை குற்றஞ்சாட்டுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். மேலும் இறைவன் நமக்கு அருளிய இவ்வாழ்வில் ஒவ்வொருவருடைய தனிப்பெரும் செயலாகவே பொருளீட்டுவதைக் கொள்ள வேண்டும் என்பதை ஆணித்தரமாக கீழ்கண்ட வசன மூலம் அறிகிறோம்.
“தொழுகை முடிவு பெற்றால், பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; நீங்கள் சித்தியடையும் பொருட்டு அடிக்கடி அல்லாஹ்வை நினைவுகூறுங்கள்.” (62:10)
இதை நினைவுகூர்ந்தவர்களாக பெற்றோரை குறை கூறும் தீய வழக்கத்தை மாற்றி, ஒவ்வொருவரும் நல்வழியில் முயற்சி செய்து முன்னேற முயல வேண்டும்.
தாய் தந்தையரிடம் பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வது, பின்னவர்களின் இரு உலக வாழ்க்கைக்கும் மிகப் பெரும் வெற்றியை பெற வழிவகுக்கின்றது. பிள்ளைகளின் மேல் வாழ்க்கைக்காக இருவருமே தங்களைக் கூடுமானவரை அர்ப்பணித்திருக்கிறார்கள். இதை உணர்த்தும் விதமாகவே இறைவன்:
“தனது தாய், தந்தை(க்கு நன்றி செய்வது) பற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து, (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள். (அவன் பிறந்த) பிறகும் இரண்டு வருடங்களுக்கப் பின்னரே அவனுக்கு பால் மறக்கடித்தாள். (ஆகவே. மனிதனே) நீ எனக்கும், உன்னுடைய தாய், தந்தைக்கும் நன்றி செலுத்தி வா, (முடிவில் நீ) என்னிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது. (31:14)
இன்று பெரும்பான்மையான இளைஞர்களின் பெற்றோருடைய தொடர்பு மிக ஒரு மோசமான நிலையிலேயே அமைந்துள்ளது. இதற்கு பெற்றோர்களும் முக்கிய காரணமாக அமைகிறார்கள். காரணம், மார்க்க விசயங்களில் அவர்கள் அக்கறை காட்டாததினாலே இந்நிலை அமைகிறது. இறைக் கட்டளைகளை அறிந்து, அதன்படி நடக்க வேண்டும், மேலும் அதில் தான் வெற்றியிருக்கிறது என்று நினைத்து பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை வளர்த்து இருந்தால், இந்நிலைகளை அடைய வாய்ப்பில்லாமல் போயிருக்கும். இதைத் தவிர்த்துத் தங்களின் மனோ இச்சைகளின்படி இறைவனுடையக் கட்டளைகளை மறந்து அல்லது தங்களுடைய வசதிக்குத் தக்கபடி இறைக்கட்டளைகளை ஏற்று நடக்கும்பொழுது, அவர்கள் வளர்க்கும் பிள்ளைகளும் வாழ்க்கையில் ஒரு பற்றுதல் இல்லாமல் அதாவது மறுமையைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல் ஏதோ வாழ்கிறோம் என்ற நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்நிலைக்குத் தள்ளப்படும் பிள்ளைகள் காலப்போக்கில் தாய் தந்தையரை மதிக்காமல் அசட்டையாகவே வாழ முற்படுகிறார்கள்.
இதை தவிர்க்க வேண்டுமெனில் ஒவ்வொருவரும் இறைக்கட்டளைகளின்படி வாழ முழு முயற்சி செய்தவர்களாக தாங்களும் நல்வழியில் நடந்து தத்தமது பிள்ளைகளையும் அந்நிலையில் வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். அப்படியே ஏதோ காரணங்களினால் பெற்றோர்களே தவறுகள் செய்திருந்தாலும் (மனித இயல்புத்தானே!) பிள்ளைகள் அவற்றை மறந்து, அவர்களை அறவணைத்து வாழ முற்பட வேண்டும். இது இரு சாரருக்கும் பொருந்தும். தவறு செய்பவர்களிடம் அல்லது செய்தவர்களிடம் நாம் மென்மையாக எடுத்துச் சொல்லி அவர்களின் தவறுகளைக் களைய முயல வேண்டும். நமது தளராத அரவணைப்பால், காலப்போக்கில் அவர்களே தங்களின் தவறுகளை உணர்ந்து நமக்காக வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கும் ஒரு நிலைக்கு ஆளாகிவிடுவார்கள்.
நாம் இவ்வுலகில் வாழும் காலமெல்லாம், பெற்றோர்களுக்கு நம்மால் இயன்றவரை உதவிகளை செய்வதை நமது தலையாயக் குறிக்கோளாக கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் கூறும் நல்ல ஆலோசனைகளை அது இறைக்கட்டளைக்குட்பட்டதாயின் செவியேற்ற அமுல் நடத்த முற்பட வேண்டும். இதன் தராதரத்தை அறியும் விதமாகவே இறைவன் :
தாய் தந்தைக்கு நன்மை செய்யும் விதமாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றோம். (எனினும்) நீ அறியாத (எவ்வித ஆதாரமும் இல்லாத)வைகளை எனக்கு இணையாக்குபடி (மனிதனே!) அவர்கள் உன்னை நிர்ப்பந்திப்பதால், (அவ்விஷயத்தில்) நீ அவ்விருவருக்கும் வழிபடாதே! (என்னிடமே) நீங்கள் திரும்ப வேண்டிதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி அது சமயம் நான் உங்களுக்கு அறிவிப்பேன்.   (29:8)
மேலும் நபி (ஸல்) கூறுகிறார்கள்.
பெரும்பாவங்களான: அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோருக்கு இடர் செய்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவைகளாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (அப்துல்லாஹ்பின் அம்ரு(ரழி) புகாரீ)
மேற்காண்பவற்றிலிருந்து பெற்றோர்களை அரவணைத்து நடப்பது, நமது இரு உலக வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது என்பதை அறிகிறோம். இதை உணர்ந்தவர்களாக, பெற்றோர்களிடம், அன்பாகவும், கனிவாகவும், மேலும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை நம்மால் இயன்றவரை செய்து நமது இரு உலக வாழ்க்கையிலும் வெற்றி பெற்றவர்களாக வாழ சகோதர, சகோதரிகள் முன் வருவார்களாக! அல்லாஹ் உதவி செய்ய போதுமானவன்.

மனிதர்களை அதிகமாக சொர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியது எது?

மனிதர்களை அதிகமாக சொர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியது எது? என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, இறையச்சமும், நன்னடத்தையுமே என பதிலளித்தார்கள். நரகில் மனிதர்களை எது அதிகம் நுழைவிக்கும்? என கேட்கப்பட்ட போது, நாவும், மர்மஉறுப்பும் என பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 1927

My Blog List