Search This Blog

Saturday, 3 September 2011

சில நேரங்களில் சில மனிதர்கள்

நியூயார்க் நகரத்தின் சுரங்கப்பாதை ஒன்றில் பிரபல எழுத்தாளர் ஒருவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் அமைதியாக அமர்ந்திருந்தார். ஆட்கள் அதிகமில்லாத அந்த இடத்தில் ஒரு அமைதியான சூழ்நிலை நிலவியது. சிலர் கண்களை மூடி அமர்ந்திருந்தார்கள். சிலர் பத்திரிகைகள் படித்தபடி அமர்ந்திருந்தார்கள். திடீரென்று அங்கு ஒருவர் தன் இரண்டு குழந்தைகளுடன் வந்தார். அவர் அந்த எழுத்தாளர் அருகே கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்தார். அந்த சிறுவர்கள் இருவரும் ஆறு வயதைத் தாண்டாதவர்கள். அவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் அங்கிருந்த அமைதி காணாமல் போயிற்று. குழந்தைகள் சத்தம் போட்டு விளையாட ஆரம்பித்து, பின்னர் சண்டையிட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் பொருட்களை எடுத்து வீசிக்கொள்ள ஆரம்பித்தனர். அந்த தந்தையோ அந்த சிறுவர்களைக் கண்டிப்பதாகத் தெரியவில்லை. கண்களைத் திறக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார்.
அங்கு அமர்ந்திருந்த மற்றவர்கள் எரிச்சலுடன் அவரைப் பார்த்ததை அவர் அறியவில்லை. அந்த எழுத்தாளரோ தன்னம்பிக்கை, பொறுமை பற்றியெல்லாம் நிறைய எழுதிக் குவித்த எழுத்தாளர். அவரே பொறுத்து பொறுத்துப் பார்த்து ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தன்னருகே கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்திருந்த அந்த நபரிடம் சொன்னார். “உங்கள் பிள்ளைகள் மற்றவர்களைத் தொந்திரவு செய்கிறார்கள். அவர்களைக் கொஞ்சம் கட்டுப்படுத்துங்களேன்.”
அந்த நபர் கண்களை மெள்ளத் திறந்தார். “ஆமாம்….ஏதாவது செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவர்கள் தாய் இறந்து விட்டாள். அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அவள் உடலைத் தர சிறிது நேரம் ஆகும் என்றதால் அங்கிருக்க முடியாமல் இங்கு வந்தேன். இனி என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அவர்களுக்கும் இதை எப்படி எடுத்துக் கொள்வது, என்ன செய்வது என்று தெரியவில்லை என்று நினைக்கிறேன்…. மன்னிக்கவும்”
அந்த எழுத்தாளர் அதுவரை அந்த நபர் மீதும், அந்தச் சிறுவர்கள் மீதும் கொண்டிருந்த கோபமெல்லாம் ஒரு கணத்தில் காற்றாய் பறந்து போயிற்று. அதற்குப் பதிலாக இரக்கமும் பச்சாதாபமும் மனதில் எழ அவர் மனைவி இறந்ததற்கு வருத்தம் தெரிவித்து விட்டு ஏதாவது உதவி தேவையா என்று மனதாரக் கேட்டார்.
அந்த எழுத்தாளர் ‘செயல்திறன் மிக்க மனிதர்களின் ஏழு பழக்கங்கள்’ என்ற புகழ் பெற்ற புத்தகத்தை எழுதிய ஸ்டீபன் ஆர். கோவே. இந்த நிகழ்ச்சியில் அந்த சிறுவர்களின் செயல்கள் மாறவில்லை. அந்த அமைதியான சூழ்நிலை மீண்டும் திரும்பவில்லை. ஆனால் அந்த குழந்தைகளும், அவர்கள் தகப்பனும் இருக்கும் சூழ்நிலை விளங்கியதும் அவர் மனநிலை முற்றிலுமாக மாறி விட்டது.
இன்னொரு நிகழ்ச்சி. கராத்தே, குங்·பூ கலைகளில் எல்லாம் மிகவும் தேர்ச்சி படைத்த ஒரு வீரர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் தியான வகுப்புகளுக்கும் தொடர்ந்து செல்பவர். ரயிலில் நன்றாகக் குடித்து விட்டு ஒருவன் ரயில் பயணிகள் ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு வம்பு செய்து சண்டையிட்டுக் கொண்டு இருந்தான். நேரமாக ஆக அவன் வார்த்தைப் பிரயோகங்கள் மிக மோசமாகப் போய்க் கொண்டு இருந்தன. ஒருசிலர் திரும்பப் பேசினர். ஒருசிலர் முகம் சுளித்துக் கொண்டு வேறிடத்திற்குப் போய் அமர்ந்து கொண்டார்கள். நீண்ட பயணமானதால் இதை நிறைய நேரம் பார்க்க நேர்ந்த கராத்தே வீரருக்கு கோபம் பொங்கி வந்தது. போய் இரண்டு தட்டு தட்ட வேண்டும் என்று நினைக்கையில் அத்தனை நேரம் அமைதி காத்த இன்னொரு பயணி அந்தக் குடிகாரனை நோக்கி சென்றதைக் கண்டு நிதானித்தார்.
அந்தப் பயணியும் தன்னைப் போலவே அடிக்கத் தான் செல்கிறார் என்று நினைத்த கராத்தே வீரருக்கு வியப்பு ஏற்படும் வண்ணம் அந்த நபர் குடிகாரன் அருகில் அமர்ந்தார். கனிவுடன் அவனிடம் கேட்டார். “உனக்கு என்ன பிரச்சனை?”
அந்தக் குடிகாரன் அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை போலத் தெரிந்தது. திகைத்துப் போய் அவரை ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லாமல் பார்த்த அவன் கண்களில் நீர் திரண்டது. அவர் தோளில் சாய்ந்து கொண்டு விம்மி அழ ஆரம்பித்தான். அழுகையினூடே தனக்குத் திடீரென்று வேலை போன செய்தியைச் சொன்னான். தன் சம்பாத்தியத்தை நம்பி வீட்டில் மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருப்பதைச் சொன்னான். அந்த முதலாளியின் இரக்கமற்ற குணத்தைச் சொன்னான். சொல்லி அழுது முடித்த பின் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த நண்பர் குடிப்பது எந்தப் பிரச்சனையையும் வளர்த்துமேயொழிய குறைக்காது என்று சொன்னார். முதலாளி மேல் இருந்த கோபத்தை சக பயணிகளிடம் காட்டுவது சரியல்ல என்று சொன்னார். குடிப்பதற்கு பதிலாக அடுத்த வேலை எங்கு கிடைக்கும், அதற்காக யாரை அணுகலாம் என்று யோசித்திருந்தால் ஒரு வழி கிடைத்திருக்கலாம் என்று சொன்னார்.
அவர் பேசப் பேச அந்தக் குடிகாரன் அடைந்த மாற்றத்தைக் கண்ட கராத்தே வீரர் அது தனக்குப் பெரிய படிப்பினையாக அமைந்தது என்று ஒரு கட்டுரையில் எழுதியதை நான் படித்தேன். அவர் எழுதியிருந்தார். “அந்த நபர் ஒரு நிமிடம் என்னை முந்திக் கொண்டு அந்தக் குடிகாரனிடம் போயிருக்கா விட்டால் கண்டிப்பாக நன்றாக அவனை அடித்து காயப்படுத்தி இருப்பேன் என்பதில் சந்தேகமில்லை. முதலிலேயே வேலை போன அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் என்னாலேயே மேலும் துக்கம் விளைந்திருக்கும். அவனுடைய செய்கைகளுக்குப் பின் உள்ள துக்கத்தை அந்த நபர் உணர்ந்திருக்க வேண்டும். அவருடைய கனிவான செய்கை அவன் புண்ணுக்கு மருந்தாக அமைந்தது. அவன் அமைதியடைந்தான். அவன் இறங்க வேண்டிய இடம் வரை அவனிடமிருந்து அதற்குப் பிறகு ஒரு சத்தமோ, தொந்திரவோ இருக்கவில்லை. அதைப் பார்த்துக் கொண்டிருந்த எல்லோருக்கும் அவன் மீதிருந்த எரிச்சலும், கோபமும் விலகியது என்பதை சொல்லத் தேவையில்லை.”
முதல் நிகழ்ச்சியில் இருக்கும் நியாயம் இரண்டாவது நிகழ்ச்சியில் இல்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அந்த இரண்டாவது நிகழ்ச்சியிலும் அந்த செயலுக்குப் பின்னால் ஒரு காரணம் இருப்பதாக உணர்ந்த ஒரு மனிதர் காட்டிய கனிவு எப்படி அந்த சூழ்நிலையை அடியோடு மாற்றியது என்பதைப் பாருங்கள்.
நமக்குத் தவறாகத் தோன்றும் பல செயல்களுக்குப் பின்னால் பல ஆழமான காரணங்கள் இருக்கின்றன. சில காரணங்கள் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிந்தவையாக இருக்கலாம். சில காரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால் அந்தக் காரணங்களை அறியும் போது புரிந்து கொள்ளல் சாத்தியமாகிறது. மன்னித்தல் சுலபமாகிறது.
எப்போதும் ஒரே மாதிரி நடந்து கொள்ள மனிதன் எந்திரமல்ல. எந்திரங்கள் கூட பழுதாகும் போது சில நேரங்களில் சில மனிதர்கள் நம் எதிர்பார்ப்புக்கு எதிர்மாறாக நடந்து கொள்வது அதிசயமல்ல. அது போன்ற சமயங்களில் அவர்கள் மீது கோபம் கொள்வதற்குப் பதிலாக ஏதாவது காரணம் இருக்கலாம் என்ற சிந்தனை நமக்குள் எழுமானால் அதைப் பெரிதுபடுத்தாமல் நகர்கிற பக்குவம் நமக்கு வந்து விடும்.

Thursday, 1 September 2011

The Tallest Man - Sultan Kosen

பொக்கிஷங்கள்

1.பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!
16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!
22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்!
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்!
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

நற் குணங்கள்



1. நிதானம்
இன்னும் இவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள் (உலோபித் தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள். எனினும் இரண்டிற்கும் மத்திய நிலையில் இருப்பார்கள். (அல் குர்ஆன் 25:67)
உன் நடையில் மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல் நடுத்தரத்தை மேற்கொள் (அல் குர்ஆன் 31:19)
2. எளிமை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் கேட்கவில்லையா, ‘எளிமை என்பது ஈமானின் (இறைநம்பிக்கையின்) அடையாளமாகும் திண்ணமாக எளிமை என்பது ஈமானின் அடையாளமாகும்.’ (அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்கள்:அபுதாவூத், மிஷ்காத்.
நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது கூறினார்கள் : முஆதே! சொகுசு வாழ்க்கையைத் தவிர்த்துக் கொள் ஏனெனில் அல்லாஹ்வின் அடியார்கள் சொகுசு வாழ்க்கை வாழ்பவர் அல்லர் (அறிவிப்பவர்: முஆது இப்னு ஜபல் (ரலி) நூல்:முஸ்னத் அஹ்மத் மிஷ்காத்)
3. தூய்மை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை ஈமானின் -இறை நம்பிக்கையின் பாதி அங்கமாகும் (அறிவிப்பாளர்: அபு மாலிக் அல் அஷ் அரி (ரலி) நூல்: முஸ்லிம்)
(நபியே!) உனது ஆடைகளை தூய்மையாக வைத்துக்கொள்வீராக! (அல்குர்ஆன் 74:4)
4. மக்களுக்கு ஸலாம் சொல்லுதல்
மனிதர்களில் அல்லாஹ்விடம் உயர்வானவர்கள் ஸலாத்தினைக் கொண்டு ஆரம்பிப்பவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்: அபுதாவூது, திர்மிதி, அஹ்மத்
உனக்கு அறிமுகமானவரோ அறிமுகமில்லாதவரோ எவராயினும் நீ ஸலாம் கூறிக்கொள். இது இஸ்லாத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும் என பெருமானார் கூறினார்கள். (நூல்: புஹாரி)
5. நாவடக்கம்
இரு தாடைகளுக் கிடையிலும் (நாவையும்) இருதொடைகளுக்கு இடையிலுள்ளதையும் (வெட்கத்தலத்தையும்) பாதுகாத்துக் கொள்வதாக ஒருவன் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்கிறேன். (நூல்:புஹாரி)
எவர் இறைவனையும், மறுமையையும் ஏற்றுக்கொள்கிறாரோ அவர் நல்லவற்றைக் கூறவும் அல்லது மௌனமாக இருக்கவும். (நூல்: திர்மிதி)
6. அன்பாக பேசுதல்
கனிவான இனிய சொற்களும் மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினை தொடரும்படி செய்யும் ஸதக்காவை(தர்மத்தை) விட மேலானவையாகும். தவிர அல்லாஹ்(எவரிடத்திலும் எவ்விதத்) தேவையும் இல்லாதவன் மிக்க பொறுமையாளன். (அல் குர்ஆன் 2:263)
7. பிறருக்கு உதவி புரிதல்
நபி (ஸல்) அவர்களிடம் எதையும் கேட்டு அவர்கள் இல்லையென்று சொன்னது கிடையாது என ஜாபில் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறை நம்பிக்கையாளருக்கு கட்டிடத்தைப் போன்றவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு உறுதுணையாக இருக்கிறது பிறகு நபி (ஸல்)அவர்கள் உதாரணத்திற்கு தங்களுடைய கை விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள். (அறிவிப்பாளர் : அபு மூஸா அஷ்அரி (ரலி), நூல்: புஹாரி, முஸ்லிம், மிஷ்காத்)
8. உண்மை பேசுதல்
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் ! உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். (அல் குர்ஆன் 9:119)
விளையாட்டுக்கேனும் பொய்யை விட்டுவிடுபவர்களுக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுவதற்கு நான் பொறுப்பேற்கிறேன். (நூல்: அபுதாவூத்)
9. நன்றி செலுத்துதல்
மனிதனுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார். (நூல்: அஹ்மத், திர்மிதி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு நோற்காத ஆனால் நன்றி செலுத்தக் கூடிய ஒரு மனிதன் பொறுமையை மேற்கொண்டு நோன்பு நோற்பவனைப் போன்றவன் ஆவான். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா (ரலி) நூல்: திர்மிதிஃ மிஷ்காத்)
10. வெட்கப்படுதல்
திண்ணமாக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு பண்பு உண்டு. இஸ்லாத்தின் பண்பு நாணமுறுவதேயாகும் . (நூல்: இப்னு மாஜா)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழிப்பதற்கு செல்லும்போது பூமியோடு நெருக்கமாகும் வரையில் தமதுஆடையை மேலே உயர்த்தமாட்டார்கள்.(அறிவிப்பவர்:அனஸ் (ரலி) நூல்: புஹாரி, முஸ்லிம்)
11. தவக்கல் (அல்லாஹ்வை சார்ந்திருத்தல்)
அல்லாஹ்வின் மீது தவக்கல் என்னும் முழுப்பொறுப்புச்சாட்டும் முறையில் நீங்கள் முழுமையாக நீங்கள் பொறுப்பு சாட்டினால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அல்லாஹ் உங்களுக்கும் உணவளிப்பான். புறவை காலையில் வயிறு ஒட்டியதாகச் செல்கிறது. மாலையில் வயிறு நிரம்பித் திரும்புகிறது. (அறிவிப்பாளர்: உமர் (ரலி) நூல்: திர்மிதி)
12. தவ்பா (மன்னிப்பு கோருதல்)
எவர் பாவமன்னிப்புக் கோரி, மேலும் நம்பிக்கைக் கொண்டு நற்செயலும் புரிய தொடங்கிவிடுகிறாரோ அத்தகையோரின் தீமைகளை இறைவன் நன்மையாக மாற்றிவிடுவான். (அல் குர்ஆன் 25:70)
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக நான், ஒருநாளில் எழுபது முறையைவிட மிக அதிகமாக அல்லாஹ்விடம் பாவம் பொறுத்தருள தேடி, அவனின்பால் பாவமீட்சிப் பெறுகிறேன் என அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி
13. உயிரினங்கள் மீது அன்பு செலுத்துதல் மற்றும் இரக்கம் கொள்ளுதல்
நபி (ஸல் ) அவர்கள் விலங்குகளின் முகத்தில் அடிப்பதைபும், முதுகில் சூடு இடுவதையும் தடுத்தார்கள்.(நூல்: திர்மிதி)
தவறான நடத்தையுடைய பெண் ஒரு நாயைக் கண்டாள். அந்த நாய் தாகம் அதிகரித்து நாக்கு வறண்டு ஒருகிணற்றைச் சுற்றி வந்து கொண்டே இருந்தது. உடனே அவள் தனது காலுறைகளை ஒரு துணியில் கட்டி, கிணற்றில்விட்டு தண்ணீர் எடுத்து, அந்த நாய்க்கு புகட்டினாள். இதன்காரணமாக இறைவன் அவளை மன்னித்தான். நூல்: புஹாரி,முஸ்லிம்

தீய குணங்கள்



1 . தற்பெருமை
(நபியே) நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம்.(ஏனெனில்) நிச்சயமாக (இப்படி நடப்பதால்) நீர் பூமியை பிளந்து விடவும் முடியாது. மலையின் உச்சி அளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல் குர்ஆன் 17:37)
நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா, தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹப் (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்)
2 . கொடுமை
அநீதி இழைக்கப் பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதிகுறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாக பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள். (நூல்: புஹாரி)
3 . கோபம்
(பய பக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர் (கள் செய்யும் தவறு) களை மன்னிப்பார்கள். (அல் குர்ஆன் 3:134)
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். கோபம் கொள்ளாதே! என்றார்கள். பலமுறை கேட்ட போதும், கோபம் கொள்ளாதே! என்றார்கள்.
(அறிவிப்பவர்: அபு ஹூரைரா (ரலி) நூல்: புஹாரி)
4 . பிறர் துன்பத்தை கண்டு மகிழல்
உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழாதே! இறைவன் அவன் மீது கருணை புரிந்து, உன்னை துன்பத்தில் ஆழ்த்திவிடுவான். (நூல்: திர்மிதி).
5. பொய்
எவன் பொய்யனாகவும், நிராகரிப்பவனாகவும் இருக்கிறானோ அவனை அல்லாஹ் நேர் வழியில் செலுத்துவதில்லை (அல் குர்ஆன்:39:3)
சந்தேகமானதை விட்டுவிட்டு உறுதியான விசயத்தை நீ எடுத்துக்கொள் (ஏனெனில் ) உண்மை மன நிம்மதி தரக்கூடியது. பொய் சந்தேகமானது என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் ஹஸன் (ரலி) நூல்கள்:அஹமத், நஸயீ, திர்மிதி, இப்னு ஹிப்பான்)
6. கெட்டவற்றை பேசுதல்
எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பவனும் சபிப்பவனும், ஆபாசமாகவும் அற்பமாகவும் பேசுபவனும் இறைநம்பிக்கையாளன் அல்லன். (நூல்:முஸ்லிம்)
7. இரட்டை வேடம் போடுதல்
மறுமை நாளில் மனிதர்களில் கெட்டவர்களாக இரண்டுமுகம் உடைய (இரட்டை வேடதாரிகளை) பார்ப்பீர்கள். ஒருமுகத்துடன் (ஒரு கூட்டத்திடம்) செல்வார்கள். வேறுமுகத்துடன் ( இன்னொரு நேரத்தில் அக்கூட்டத் திடம்) செல்வார்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (அதாவது தனதுகொள்கையை சந்தர்ப்பத்திற்கு தகுந் தவாறு மாற்றிக் கொள்வார்கள்) (அறிவிப்பவர்:அபுஹூரைரா (ரலி)நூல்கள்:புஹாரி, முஸ்லிம்)
8. பாரபட்சம் காட்டுதல்
நபி (ஸல்) கூறினார்கள் (இன மத மொழி) வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லன். அதற்காக போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (நூல்:அபுதாவூத்)
முஃமின்களே நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது(உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள் (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையாக சாட்சி கூறுங்கள்) (அல் குர்ஆன்:4:135)
9. வரம்பை மீறிய புகழ்ச்சி –
நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: அதிகம் புகழக் கூடியவர்களை நீங்கள் கண்டால் அவர்கள் முகத்தில் மண்ணை வாரிப் போடுங்கள் (அறிவிப்பாளர்:மிக்தாத் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்ஃ மிஷ்காத்)
10. பரிகாசம்
முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம் . ஏனெனில் (பரிகசிக்கப் படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம் (அவ்வாறே) எந்தப்பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம்செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம் இன்னும் உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும்(உங்களில்) ஒருவரைடியாருவர் (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள் . ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய)பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும் எவர்கள்(இவற்றிலிருந்து மீழவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரராவார்கள். (அல் குர்ஆன் 49:11)
11. வாக்குறுதி மீறல்
வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக வாக்குறுதி (பற்றி) மறுமையில் விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:34)
நயவஞ்சகனின் அடையளங்கள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான், வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடி செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரிஃ முஸ்லிம்)
12. சண்டை
அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான் . இதனை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்:புஹாரி)
13. குறை கூறல்
குறை சொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அல் குர்ஆன் 104:1)
இறை நம்பிக்கையாளர்களே! உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் யாராவது ஒருவர்தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தை புசிக்கவிரும்புவாரா, (இல்லை!) அதை நீங்கள் வெறுப்பீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீளுவதை அல்லாஹ் ஏற்றுக்கொள்பவன் மிக்க கருணையாளன். (அல் குர்ஆன் 49:12)
14. பொறாமை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறாமையைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு விறகை விழுங்கி விடுவதுபோல் பொறாமை நன்மைகளை விழுங்கிவிடுகின்றது. (அறிவிப்பவர்: அபுஹூரைரா (ரலி), நூல்:அபுதாவூது, மிஷ்காத்)
15. கெட்ட பார்வை
(நபியே) ஈமான் கொண்டவர்கள் தங்கள் பார்வையை (தவறானவைகளிலிருந்து) தாழ்த்திக் கொள்ள வேண்டுமென்று கூறுவீராக. (அல் குர்ஆன் 24:30)
கண்கள் செய்யும் சைகைகளையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (அல் குர்ஆன்40:19)
செவி, பார்வை, மனம் இவை ஒவ்வான்றும் மறுமைநாளில் (அதனதன் செயல் பற்றி) நிச்சயமாக விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:36)

இஸ்லாமிய குண நலன்கள்

1. வீரம் உள்ள செயல் எது என்று கூறலாம் ?
பிறர் செய்யும் தீங்கை மன்னித்தல் வீர செயல் ஆகும்.
(காண்க அல்குர்ஆன் 31:17ஃ 42:43)
சிறந்த வீரம்-கோபத்தை அடக்கிக் கொள்ளுதல்.(நபிமொழி)
2. மறுமையில் இறைவனை சந்திக்க நாம் என்ன செய்யவேண்டும் ?
நற்செயல்களை செய்தலும், தன் இறைவனுக்கு இணைவைக்காமல் இருப்பதும். (காண்க அல்குர்ஆன்18:110ஃ29:4
3. இறைவனின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளதா ?
தந்தையின் திருப்தி :
இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது.
(அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ர்) தப்ரானி.
தாய்க்கு நன்மை செய்வது :
இறைதூதர் அவர்களே நல்லது செய்யப்படத்தகுதியுடையவர் யார்? எனக் கேட்டேன். உனது தாய் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்யப்படத் தகுதியுடையவர் யார்? என்று கேட்டேன் உனது தாய் என்று கூறினார்கள்.(மீண்டும்) நல்லது செய்யப்பட தகுதியுடையவர் யார்? எனக்கேட்டேன். உன் தாய் தான் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்ய தகுதியானவர் யார்? எனக் கேட்டேன் உனதுதந்தை அடுத்து (உன்) நெருங்கிய உறவினர்கள், அதற்கும் அடுத்து உறவினர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் என தன் பாட்டனார் மூலம் தந்தை வழியாக பஹ்ஷ் இப்னுஹகிம் அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஆதாரம்) திர்மிதி, அபு தாவூத்,
மேலும் காண்க அல்குர்ஆன் 17:24ஃ 31:15)
4 . பெற்றோருக்கு கேட்கக் கூடிய பிரார்த்தனை என்ன?
ரப்பிர்ஹம்ஹூமா கமா ரப்பயானி ஸஃஈரா (பார்க்க அல்குர்ஆன் 17:24)
பொருள்: என் இறைவனே சிறு வயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும், பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறே இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக
5 . பெற்றோரை திட்டாமல் இருப்பது ?
ஒருவன் தன் பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று ஆகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் (அது) எப்படி ஒருவன் (தன் பெற்றோரைத்) திட்டுவான்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். ஒருவனை இவன் திட்டுவான் அவனோ இவனது தாயையும், தந்தையையும் திட்டுவான்(இது அவனே பெற்றோரை திட்டுவதற்கு சமமாகும்) என்றுநபி (ஸல்) கூறினார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்,அபுதாவூத்,திர்மிதி)

My Blog List